''கன்னட அமைப்புகளிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை'' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தின் போது பெங்களூரில் உள்ள தமிழ் சினிமா தியேட்டர்கள் தாக்கப்பட்டன. தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ் நடிகர்-நடிகைகள் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்தில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு கர்நாடகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரஜினிகாந்தின் திரைப்படத்தை கர்நாடகத்தில் வெளியிட விடமாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறி, ரஜினிகாந்த்தின் உருவபொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தின.
இந்த நிலையில் கன்னட தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டி: கடந்த 2 நாட்களாக கர்நாடகத்தில் என்னை பற்றி தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று நான் சொன்னதாக பிரசாரம் செய்கிறார்கள். உதைக்க வேண்டாமா? என்று நான் சொன்னேன். யாரை சொன்னேன் தெரியுமா. சில விஷ கிருமிகளை, தமிழ்நாடு-கர்நாடக அமைதியை கெடுக்கும் விஷ கிருமிகளை தான் உதைக்க வேண்டும் என்று சொன்னேன்.
சிறிய சிறிய விஷயங்களுக்காக பேருந்துகளை கொளுத்துவது, சினிமா தியேட்டர்களை உடைப்பது போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்களைத்தான் அவ்வாறு சொன்னேன். கர்நாடக மக்களை உதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் சொல்லவே இல்லை. 5 கோடி மக்களை உதைக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. விவேகம் இல்லாதவன் அல்ல.
எனது பேச்சு கர்நாடக மக்களின் மனதை பாதித்து இருந்தால் நான் மன்னிப்பு கேட்க தயார். ஆனால் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. இதனால் மன்னிப்பு கேட்பதற்கான அவசியம் இல்லை.
பர்வதம்மா ராஜ்குமார், அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன், கிரீஷ் கர்னாட், அசுவத் போன்ற பெரிய பெரிய ஆட்கள் மனசாட்சியை தொட்டு சொல்லட்டும். நான் தவறு செய்ததாக அவர்கள் சொன்னால் அப்போது நான் மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னிப்பு கேட்க சொல்லும் கன்னட அமைப்புகளை சேர்ந்த நான்கைந்து பேர் ஒட்டுமொத்த கர்நாடகத்தின் 5 கோடி மக்களின் பிரதிநிதிகள் அல்ல.
இன்னொரு விஷயத்தையும் நான் சொல்ல விரும்புகிறேன். எனது படத்தை கர்நாடகத்தில் வெளியிட விட மாட்டோம் என்று சொல்கிறார்கள். கர்நாடகத்தில் ரஜினிகாந்த் படத்தை திரையிடாவிட்டால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் மட்டும் எனது படத்தை பார்க்கவில்லை. கன்னடர்களும் எனது படத்தை பார்க்கிறார்கள். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. இந்த பிரச்சினைக்கு தயவுசெய்து முற்றுப்புள்ளி வையுங்கள் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார்.