தெலுங்கு மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமான யுகாதி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
யுகாதி திருநாள் நாளை உலகம் முழுவதும் வாழும் தெலுங்கு மொழி மக்களால் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துச்செய்தி விடுத்துள்ளனர்.
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா: யுகாதி திருநாளையொட்டி என் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டு அமைதியையும், வளத்தையும், ஒற்றுமையையும் கொண்டு வந்து நாட்டுக்கு மேன்மை பயக்கும் என நம்பிக்கை கொள்கிறேன்.
முதல்வர் கருணாநிதி: தெலுங்கு மொழி பேசும் மக்களின் புத்தாண்டு நாளாகிய "உகாதித் திருநாள்' நாளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பண்பாட்டுணர்வோடு ஒன்றிக்கலந்து பல ஆண்டுகளாகத் தமிழக மக்களோடு இணைந்து வாழும் தெலுங்கு சமுதாய மக்கள் அனைவரது வாழ்வும், தொழிலும் சிறந்து வளம் பெருகிட என் இதயம் கனிந்த உகாதித் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
மனித நேயத்தின் அடிப்படையில் இந்த நல்லுறவு பேணும் பாங்கும், மற்றவர்களை மதிக்கும் நல்லிணக்க உணர்வுகளும் தமிழகத்தில் மட்டு மல்லாமல் மற்ற மாநிலங்க ளிலும் தழைத்திட வேண்டுமென்ப தைத் தமிழகம் எதிர்பார்க்கிறது.
ஜெயலலிதா: வசந்த காலத்தின் தொடக்கமாகத் திகழும் யுகாதித் திருநாளை உற்சாகத் துடன் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் நிலவுகின்ற இது போன்ற ஒருமைப்பாடு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தழைத்தோங்க வேண்டும் என்ற என்னுடைய அவாவைத் தெரிவித்து, இந்த யுகாதித் திருநாள் புதிய வாழ்வையும், வளத்தையும் வெற்றிகளையும் வழங்கும் புத்தாண்டாக மலரட்டும் என்று வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
விஜயகாந்த்: நாளை யுகாதி திருநாள். இத்திருநாளில் மக்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கு, ஏற்ப நாட்டிலுள்ள அனைத்து மக்களும் வேற்றுமைகள் இன்றி அவ்வப்போது ஏற்படும் சமுதாய பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.