கர்நாடகத்தில் தேர்தல் நடந்து முடியும் வரை ஒகேனக்கல் பிரச்சனையில் தற்காலிக அமைதி காப்போம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒகேனக்கல்லிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் வாழும் தமிழர்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடி தண்ணீர் வழங்குவதற்காக எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, 1334 கோடி ரூபாய்க்கான அத்திட்டத்துக்கு ஜப்பான் நாட்டு வங்கியின் நிதி உதவியும் பெற்று, முறைப்படி பெற வேண்டிய தடையிலா சான்றுகள் மற்றும் அனுமதிகளையெல்லாம் படிப்படியாகப் பெற்று இரு மாவட்டங்களில் உள்ள சுமார் 30 லட்சம் மக்களின் குடி தண்ணீர் தேவையை நிறைவு செய்ய தொடக்கப் பணிகளை கடந்த 26.2.2008 ஆம் தேதியன்று மேற்கொண்ட பிறகு, அறிவிக்கப்பட்ட கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, அந்த மாநிலத்து பிஜேபி போன்ற சில கட்சிகளும்,
எப்போதுமே தமிழ், தமிழர் நலன்களுக்கு விரோதமாகச் செயல்படும் சமூக விரோதிகளும் ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு என்று குரல் எழுப்பி அதையொட்டி வன்முறைச் செயல்களிலும் ஈடுபடத் தொடங்கியதை நான் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு தெரிவித்தது மட்டுமல்லாமல், கர்நாடக மாநிலத்தில் உள்ள கட்சிகளும், அரசும், இத்திட்டம் நிறைவேறுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென்று தனிப்பட்ட முறையிலும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாகவும் வேண்டுகோள் விடுத்தது பயனில்லாமல் போய் கர்நாடகத்தில் தமிழர்களைத் தாக்கும் அளவுக்கும், போக்குவரத்து வாகனங்களுக்கு, உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கின்ற அளவுக்கும் வன்முறைச் சேட்டைகளைத் தொடர தொடங்கியதால் அதன் எதிரொலியாக தமிழகத்திலும் எதிர்ப்பு நிலை தவிர்க்க முடியாததாகி சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.
இரு மாநில மக்களும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டுமென்று நான் பல காலமாகத் தொடர்ந்து கூறி வருகிற வேண்டுகோள் புறக்கணிக்கப்படுகிறதே என்ற எனது வேதனைக்கு மருந்தாகவும், தமிழகத்தின் தாங்கும் சக்தி தளர்ந்து போய்விடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் இங்குள்ள கட்சிகள் பலவும், கட்சித் தலைவர்களும் களமிறங்கியும், குறிப்பாகவும், சிறப்பாகவும் தமிழ்த் திரை உலகத்துக் கலைஞர் பெருமக்கள் அணி திரண்டு அமைதியான முறையில் அற வழியில் ஒரு பிரம்மாண்டமான உண்ணா நோன்பை மேற்கொண்டு அகில இந்தியாவிலும் நமது அரசும் மக்களும் எடுத்துரைக்கும் நியாயத்தை சுட்டிக் காட்டும் வகையில் பல்லாயிரவர் கூடி மெய்ப்பித்துக் காட்டிய தமிழ் உணர்வையும் போற்றுவதுடன் இதயமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் எழுந்துள்ள கோபமும் கொந்தளிப்பும் மேலும் தொடர்ந்து சகோதர மாநிலங்களான தமிழகம், கர்நாடகத்திற்கிடையே நிரந்தரப் பகை மூள்வதை இந்திய ஒருமைப்பாட்டிலும் இறையாண்மையிலும், ஒற்றுமையிலும் நம்பிக்கையுள்ள யாராலும் ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே கர்நாடகத்தில் தேர்தல் ஜூரமும் விரைவில் வந்துவிட இருக்கும்போது, இந்த விரும்பத்தகாத வன்முறைகள் அதன் விளைவாகவும் இரு தரப்பினரிடையே இடம் பெறக் கூடாது என்று அழுத்தந்திருத்தமாக கூற விரும்புகிறேன்.
நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருப்பதற்கு நாம் தான் நம்மை முன்னிருத்தி அமைதி அணி வகுப்பை நடத்திட வேண்டும். கர்நாடகத்தில் இன்று நடந்திடும் கவர்னர் ஆட்சி முடிவுற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைய இருக்கும் புதிய ஆட்சி மலருவதற்கு இடையேயுள்ள சில நாட்கள் மட்டுமே அவசியம் கருதி பொறுத்திருப்போம்.
அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு, அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும் என்றும், 1998ல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இத்திட்டம் நடக்குமென்றும், நடப்பதற்கு வலியுறுத்துவோம் என்றும், அதற்கு நியாயம் கிடைக்குமென்றும் அசையாத நம்பிக்கையோடு இப்போது தற்காலிகமாக இந்தப் பிரச்சனையில் அமைதி காப்போம்.
அதன் பிறகும் இதே நிலை நீடிக்குமென்றால், தமிழர்கள் தங்கள் உடைமைகளையும், உயிர்களையும் இழந்தாலும் கூட உரிமைகளையும் இழந்திட முன்வரும் சுயமரியாதை அற்றவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதை உலகிற்கு உணர்த்துவோம். அந்த தன்மானக் கூட்டத்தின் ஒரு குரலாக இப்போது என் குரலை உயர்த்தி, இதுவரை நடந்தது இனியும் தொடராமல் இன்றுடன் நிறுத்தி பொறுத்திருந்து கர்நாடகத்தில் வரவிருக்கின்ற புதிய ஆட்சியாளரின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.
குடிக்கத் தண்ணீர் கூடக் கொடுக்க மாட்டோம் என்று கூறப் போகிற ஆட்சியா கர்நாடகத்தில் வந்து விடப் போகிறது? பயிர் வாழத் தான் தண்ணீர் இல்லை என்றார்கள். உயிர் வாழ வரும் தண்ணீரையுமா தடுப்பார்கள்? நியாயம் வெல்லும்; நிச்சயம் வெல்லும்.
இடையில் உரிமைக்காக தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையை உலகிற்கே நிலை நாட்டிக் காட்டிய திரையுலக கலைஞர் பெருமக்கள், கட்சித் தலைவர்கள், பல்வேறு துறையில் பாடுபடும் பெருமக்கள் அனைவருக்கும் அவர்தம் நல் உள்ளத்துக்கும் ஊக்கமளிக்கும் வகையில் என்றும் மறவாத நன்றியையும் மனந்திறந்த பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும் பின்னர் நாம் கலந்து பேசி; தேவைப்பட்டால் களம் காண்போம். அதற்குத் தேவையில்லாமலே போய், தேசத்தின் ஒற்றுமை காக்கப்படும் என்று நம்புவோம்.
இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.