''ஒகேனக்கல் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முதலமைச்சர் கருணாநிதி அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்த வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வேலூரில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 1998 செப்டம்பர் மாதத்தில் கர்நாடக- தமிழக அரசுகள் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது, அதன்படி, கர்நாடக அரசு, காவிரியில் இருந்து பெங்களூருக்கு குடிநீர் கொண்டு செல்லவேண்டும், அதேபோல், தமிழகத்திற்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது.
பெங்களூர் குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு வேகமாக நிறைவேற்றி இருக்கிறது. ஆனால் தமிழக அரசு 10 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. தண்ணீர் இல்லாத வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 250 கி.மீ. தூரத்திற்கு பல கோடி ரூபாய் செலவு செய்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்றார்கள்.
ஆனால் தர்மபுரியில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் இருக்கிற காவிரி நதியில் இருந்து தர்மபுரி மாவட்ட மக்களுக்கு குடிநீரை கொடுக்க முடியாமல் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகள் உள்ளன. இந்த சிக்கலில் 2 புறமும் நடக்கிற விரும்ப தகாத சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும். 2 மாநிலங்களிலும் அமைதி நிலவ உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒகேனக்கல் விவகாரம் பற்றி முதலமைச்சர் கருணாநிதி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் கூட்டி இந்த பேசவேண்டும். தற்போது சட்டப் பேரவை நடந்து கொண்டு இருப்பதால் அனைத்து கட்சியினரையும் கூட்டி, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்யலாம். நாளையோ நாளை மறுதினமோ அனைத்துக் கட்சியினரை கூட்டி பேசலாம் என்று ராமதாஸ் கூறினார்.