சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதியாக வழக்கறிஞர் எம்.சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் அளித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தற்போது 44 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 5 நீதிபதிகள் இடம் காலியாக உள்ளன. இதற்கிடையில், வழக்கறிஞர்கள் எம்.சத்தியநாராயணன், கண்ணன் ஆகியோரை நீதிபதியாக நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தது. சத்தியநாராயணனை புதிய நீதிபதியாக நியமிக்க தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, நீதித்துறை மரபுபடி ஆவணங்களை மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தது. எம்.சத்தியநாராயணன் அந்த ஆவணங்களில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா முன்பாக இந்தியில் கையெழுத்திட்டார். அவர் கையெழுத்திட்டதும், அந்த ஆவணங்கள் உடனடியாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இன்னும், ஒரு வாரத்தில் குடியரசுத் தலைவர் நியமன உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியமன உத்தரவு வந்து சேர்ந்ததும் சத்திய நாராயணன் நீதிபதியாக பதவி ஏற்பார். தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் 44 நீதிபதிகள் உள்ளனனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சத்தியநாராயணனை சேர்த்து 45 ஆக நீதிபதிகள் எண்ணிக்கை உயர்கிறது. இதைத் தொடர்ந்து 4 நீதிபதிகள் இடங்கள் காலியாக உள்ளன.