நதிநீரை தேசியமயமாக்குவதே காவிரி பிரச்சனைக்குத் தீர்வு என்று நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத் குமார் கூறினார்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்குக் கன்னடர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதைக் கண்டித்துச் சென்னையில் தமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் சரத் குமார் பேசியதாவது:
காவிரிப் பிரச்சனை ஒரு சீசன் பிரச்சனை. மழை சரியாகப் பெய்துவிட்டால் இப்பிரச்சனை பெரிதாக எழுவதில்லை. மழை பெய்யவில்லை என்றால் அரசியல்வாதிகள் இப்பிரச்சனையைப் பெரிதாக்குகின்றனர்.
இன்று நேற்றல்ல கடந்த 1974 முதல் இப்பிரச்சனை எந்தவொரு தீர்வையும் எட்டாமல் நீடிக்கிறது. இப்பிரச்சனை உடனடியாக ஒரு முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
ஒருங்கிணைந்த இந்தியா மீண்டும் துண்டு துண்டாகச் சிதறுவதற்கு முன்பு, மத்திய அரசு இப்பிரச்சனையில் தலையிட்டுச் சுமூகமாகத் தீர்க்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி கன்னடர்கள் செயல்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. கர்நாடகாவில் தற்போது அரசு இல்லை. அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கிறது. ஆளுநர் வலியுறுத்தியும் கன்னடர்கள் கேட்பதாக இல்லை.
இப்பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழர்கள்தான். மனிதனாக இருக்க வேண்டும் என்றால் தமிழனாக இருக்க வேண்டும் என்று சத்தியராஜ் கூறினார். அந்தக் காரணத்தால்தான் நாம் இன்னமும் அமைதியாக இருக்கிறோம்.
நதிநீரை தேசியமயமாக்க வேண்டும். இல்லை என்றால் காவிரியில் தமிழகத்திற்கு பங்குண்டு என்பதே கனவாகிவிடும். அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.