அரசு கேபிள் இணைப்பு ஜூலை 15ஆம் தேதி முதல் படிப்படியாக பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
சென்னை மாநகரத்தில் கேபிள் தொலைக்காட்சி வசதிகளை ஏற்படுத்தி நடத்த தமிழக அரசு நிறுவனமான அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனிற்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை கடந்த 2 ஆம் தேதி அனுமதி வழங்கியது.
இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்க முதல்வர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் வருமாறு:
ஜூலை 15 ஆம் தேதி முதல் நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் அரசு கேபிள் இணைப்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்.
ஆகஸ்டு 15 ஆம் தேதி முதல் நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அரசு கேபிள் இணைப்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்.
செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் சென்னை மாநகரத்தில் அரசு கேபிள் இணைப்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்.
எல்லா மாவட்டங்களிலும், சென்னை மாநகரத்திலும் கேபிள் தொலைக்காட்சியை அரசு நிறுவனமே நடத்துவதற்குத் தேவையான கருவிகளை வெளிப்படையான டெண்டர் முறையைப் பின்பற்றி வாங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் உள்துறைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர், தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலாளர், அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.