அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில் இடதுசாரிகள் எப்படி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து செயல்படுகிறார்களோ அதுபோல தமிழக அரசும் ஒகேனக்கல் பிரச்சனையில் நடந்துகொள்ள வேண்டும் என்று என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த கூறினார்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட அமைப்பினரை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் இன்று தமிழ்த்திரையுலகத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
ஒகேனக்கல் குடிநீர் பிரச்சனையில் கர்நாடகம் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று இங்கு பேசியவர்கள் எல்லோரும் தெரிவித்தார்கள். நம்முடைய தண்ணீரை நாம் எடுத்துக்கொள்வதற்குத்தான் அவர்கள் பிரச்சனை எழுப்பி வருகிறார்கள். நமக்கு கொடுக்கப்பட்ட அளவில் அதற்கும் குறைவாக தண்ணீர் எடுப்பதற்கு பிரச்சனை செய்கிறார்கள். கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக இந்த பிரச்சனையை அங்குள்ளவர்கள் அரசியலாக்கி வருகிறார்கள்.
தமிழ்ப்படங்களின் பேனர்களை கிழித்தெறிவது போன்ற தவறான முன்னோட்டங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று கூறுவார்கள். அப்படித்தான் தமிழகத்துக்கு வந்த எல்லோரையும் எல்லா மக்களையும், ஒன்றாக நினைத்து வாழ வைக்கிறோம்.
இதேபோல அங்குள்ள கர்நாடக மக்களும் நல்லவர்கள்தான். ஆனால் அரசியல்வாதிகளில் சுயநலவாதிகள் சிலர் இதனை தூண்டி விட்டிருக்கிறார்கள். அரசியல் பேசுவதற்கு இது சரியான மேடை அல்ல. அதே சமயம் எல்லோரும் அரசியல் செய்தால் எதைத்தான் பேசுவது?
காவிரி பிரச்சனையில் தீர்ப்பை ஏற்க மாட்டேன் என்று அம்மாநில கவர்னரே கூறியிருக்கிறார். அப்படியானால், இந்த பிரச்சனைக்கு எப்படித்தான் தீர்வு ஏற்படும்? மத்திய அரசை நாம் கண்டித்தாக வேண்டும். அப்படி இல்லாவிட்டால் என்ன பயன்? இந்த உண்மையை நாம் பேசியாக வேண்டும். நமக்கு உரிமையான தண்ணீரை எடுத்துக் கொள்வதற்கு கூட எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது அடிப்படை; அதுதான் சட்டம். இதற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் இப்படியே மேடை போட்டு பேசிவிட்டு, கூடிவிட்டு போகவேண்டியதுதான். இதனால் எதையும் சாதிக்க முடியாது.
இந்த விஷயத்தில் இருதரப்பினரும் எதற்காக சண்டையிட்டுக்கொள்ள வேண்டும். இதனை தீர்த்து வைக்க வேண்டியது யாருடைய பொறுப்பு என்பதை உணர வேண்டும். எனவே மத்திய அரசுதான் இதற்கு தீர்வுகாண நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. இதற்கு ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். சட்டமன்றத்தில் பேசும்போதுகூட நான் இதுபற்றி தெரிவித்தேன். அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில் இடதுசாரிகள் எப்படி ஒரு புள்ளியை வைத்து மத்திய அரசை நடுங்கச் செய்கிறார்களோ அப்படி தமிழ்நாடும் இந்த பிரச்சனையில் மத்திய அரசுக்கு ஒரு புள்ளி வைக்க வேண்டும் என்று கூறினேன்.
இன்று காலை கூட சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தில் பேசியபோது, உண்ணாவிரதம் நடத்தும் தமிழ்த் திரையுலகத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கூறினேன். நாம் போராடுவதற்கு தயார். ஆனால் தீர்வு காண வேண்டியது யார்? தமிழ்மக்கள் போராடிப்போராடி அலுத்து விட்டார்கள் என்று விஜயகாந்த் கூறினார்.