கர்நாடாகாவை கண்டித்து நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களும், நடிகையர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பகுதி தங்கள் மாநிலத்திற்கு சொந்தமானது என்று கூறியும் கன்னட அமைப்புகள் கடந்த சில தினங்களாக கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழ் திரைப்படங்கள் ஓடும் தியேட்டர்கள் மீதும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு தமிழ் திரைப்படங்கள் மற்றும், தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பையும் நிறுத்தி விட்டனர். இதற்கு தமிழ் திரையுலகத்தின் சார்பில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் உண்ணா விரதப் போராட்டம் இன்று நடத்தப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ் திரையுலகத்தினரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி., தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன் ஆகியோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள். நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி வரவேற்புரையாற்றி தொகுப்புரை வழங்கினார்.
உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து கே.ஆர்.ஜி. பேசும்போது, சகோதரர்களுக்கு இடையே சண்டை கூடாது என்பதையே இந்த உண்ணாவிரதத்தின் மூலம் கன்னட மக்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்பும் செய்தி என்றார்.
இதில் பேசுபவர்கள் கலையுலகம் குறித்து மட்டுமே பேச வேண்டும் என்றும், அரசியல் குறித்து பேசக் கூடாது என்றும் அதனை முதலமைச்சர் கருணாநிதி பார்த்துக் கொள்வார் என்றும் கே.ஆர்.ஜி. கூறினார்.
இந்த உண்ணாவிரதத்தில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், விஜயகுமார், பிரபு, சூர்யா, விஜய், டெல்லி கணேஷ், சார்லி, சத்யராஜ், சிபிராஜ், ஜீவன், விக்னேஷ், முரளி, ஸ்ரீகாந்த், விஷால், மோகன், நரேன், அருண்பாண்டியன், பிரசாந்த், அர்ஜூன், வாகை சந்திரசேகர், பரத், பார்த்திபன், எஸ்.வி.சேகர், அவரது மகன் அஸ்வின் சேகர், கவுண்டமணி, ஆனந்த்ராஜ், பிரகாஷ்ராஜ், செல்வ ராகவன், தனுஷ், அருண்குமார், மன்சூர் அலிகான், ராம்கி,
நடிகைகள் மனோரமா, குஷ்பு, சினேகா, விந்தியா, ஸ்ரீப்ரியா, ரேகா, லதா, த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன், பாவனா, பாபிலோனா, லட்சுமி ராய்.
இயக்குனர்கள் முக்தா சீனிவாசன், எஸ்.பி.முத்துராமன், வி.சி.குகநாதன், விஜய. டி.ராஜேந்தர், சரவண சுப்பையா, சீமான்.
தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம். சரவணன், சரண், கலைப்புலி தாணு, ஆர்.பி. சௌத்ரி, அன்பாலயா பிரபாகரன், காஜா மொய்தீன், சிவசக்தி பாண்டியன், ஏ.எல்.அழகப்பன், கே.எல். சீனிவாசன்.
இசையமைப் பாளர் தேவா உள்ளிட்ட தமிழ் திரையுலகத்தின் ஸ்டண்ட், டப்பிங் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த 24 சங்கங்களை சேர்ந்த ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.