ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கர்நாடகத்தைக் கண்டித்தும், பெங்களூருவில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்ட திரையரங்குகள் தாக்கப்பட்டதை எதிர்த்தும் தமிழ்த் திரையுலகினர் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழகச் சட்டப் பேரவையில் மனம் நிறைந்த வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.
சட்டப் பேரவையில் இன்று தே.மு.தி.க. உறுப்பினரும் நடிகருமான விஜயகாந்த் விடுத்த வேண்டுகோளிற்குப் பதிலளித்த நிதியமைச்சர் க.அன்பழகன், போராட்டத்தில் பங்கேற்றுள்ள நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் அவையின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
"கர்நாடகத்திற்கு தனது கண்டனத்தைத் தெரிவிப்பதற்காக தமிழ்த் திரையுலகம் இந்த அமைதியான போராட்டத்தை நடத்தி வருகிறது. இதற்கு இந்த அவை தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது" என்றார் அன்பழகன்.