''நெய்வேலி தொழிலாளர் பிரச்சனையை ஒரு வாரத்தில் தீர்த்து வைப்பதாக மத்திய அமைச்சர் என்னிடம் உறுதி அளித்துள்ளார்'' என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சட்டப் பேரவையில் இன்று கூறினார்.
சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி 8.33 விழுக்காடு போனஸ் வழங்கக் கோரியும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும் நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டப் பேரவையில் இன்று எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பத்மாவதி பேசுகையில், நெய்வேலியில் போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்களுடன் என்.எல்.சி. நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்த முதலமைச்சர் கருணாநிதி உதவி செய்ய வேண்டும் என்றும், இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, நெய்வேலி தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர் தாசரி நாராயண ராவிடம் பேசினேன். அவர் ஒரு வாரத்தில் இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதாக என்னிடம் உறுதியளித்துள்ளார் என்றார்.