போயஸ் கார்டன் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதி என்பதால் அங்கு தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை துணை ஆணையர் மவுரியா கூறினார்.
கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக கன்னட அமைப்புகள் நடத்தி வரும் வன்முறையை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் இன்று சில இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கர்நாடக அமைப்புகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை போயஸ் கார்டன் ராகவ வீரா அவென்யூவில் வசித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு செல்லும் வழியில் தடுப்பு வேலியை காவல்துறையினர் அமைத்துள்ளனர். அந்த பகுதியாக செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.
இந்த பணியில் தேனாம்பேட்டை காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு சாதாரண உடையிலும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மைலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் மவுரியா, உதவி ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் ரஜினிகாந்த் வீட்டுக்கு இன்று காலை வந்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் துணை ஆணையர் மவுரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதி என்பதால் போயஸ் கார்டனில் தீவிர கண்காணிப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.