சட்டப் பேரவையில் கூடுதல் நேரம் பேச அனுமதிக்காததை கண்டித்தும், தமிழ்நாட்டில் உள்ள மின் வெட்டை கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று வெளி நடப்பு செய்தனர்.
சட்டப் பேரவையில் இன்று எரிசக்தி, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன் பேசினார். பின்னர் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மின்சார திட்டங்கள் பற்றிய புள்ளி விவரங்களை வாசித்தார்.
முன்னதாக விசுவநாதன் பேச தொடங்கும் போது அவருக்கு 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக சபாநாயகர் ஆவுடையப்பன் குறிப்பிட்டு இருந்தார். 20 நிமிடங்களையும் தாண்டி விசுவாதன் பேசியதால் அப்போது சபையை நடத்திய துணை அவைத் தலைவர் வி.பி.துரைசாமி 20 நிமிடங்கள் கடந்து விட்டது. 2 நிமிடங்கள் அதிகமாக பேசிவிட்டு அமருங்கள் என்றார். ஆனால் விசுவநாதன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.
அவருக்கு துணை அவைத் தலைவர் அனுமதி வழங்க வில்லை. இதைத் தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க. கொறடா செங்கோட்டையன் எழுந்து கூடுதல் நேரம் வழங்கும் படி கேட்டுக்கொண்டார். ஆனால் அனுமதி வழங்கப்பட வில்லை. இதையடுத்து அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அவையை விட்டு வெளியே வந்த பின்பு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், அலுவல் ஆய்வுக்குழுவில் எங்களுக்கு 35 நிமிடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் யாரையும் கலந்து பேசாமல் அவர்களாகவே 20 நிமிடமாக அதை குறைத்து இருக்கிறார்கள். எனவே கூடுதல் நேரம் பேச அனுமதிக்காததை கண்டித்தும், தமிழ்நாட்டில் உள்ள மின் வெட்டை கண்டித்தும் வெளி நடப்பு செய்தோம் என்றார்.