கிருஷ்ணகிரியில் கர்நாடகா பேருந்துகள் மீது தார் பூசிய 44 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்புகள், தமிழக அரசு பேருந்துகளை உடைத்தும் தமிழர்களை தாக்கியும் வருகின்றனர். இதனால் ஓசூர், ஊட்டியில் இருந்து கடந்த 2 நாட்களாக பெங்களூரு, மைசூருக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இன்றும் 3-வது நாளாக பெங்களூரு, மைசூருக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஊட்டியில் இருந்து செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையான கக்கனல்ல சோதனைசாவடி வரை சென்று திரும்பி வருகிறது.
கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள், கர்நாடகா பேருந்துகளை சிறைப்பிடித்து கன்னட எழுத்துக்களை தார் பூசி அழித்து கோஷமிட்டனர்.
கிருஷ்ணகிரியில் கர்நாடக மாநில பேருந்துகளை தடுத்து நிறுத்தி எழுத்துகளை தார் பூசி அழித்தனர். இதில் ஈடுபட்ட 44 பேரை காவல்தறையினர் கைது செய்தனர்.
இந்த நிகழ்வை தொடர்ந்து ஓசூர், ஜுஜுவாடி சோதனைச் சாவடி மற்றும் எல்லைப் பகுதியில் அதிரடிப் படை குவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் பலத்த பாதுகாப்பு!
மதுரையில் நேற்று வழக்கறிஞர்கள் மாட்டுத்தாவாணி பேருந்து நிலையத்தில் கர்நாடகா பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் பல இடங்களில் கர்நாடகத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து மாட்டுத்தாவாணி பேருந்து நிலையம் உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.