நெய்வேலியில் 2வது அனல் மின் நிலையம் முன்பு இன்று மறியல் செய்ய முயன்ற என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 1,845 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 13,000 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் 8.33 விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும். சீனியாரிட்டி முறையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் மார்ச் 29ஆம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 6-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 1,845 பேர் கலந்து கொண்டனர். இதில் 24 பேர் பெண்கள் ஆவர். இந்த போராட்டத்தையொட்டி அங்கு ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோ கூறியுள்ளார்.