ஏப்ரல் 5ஆம் தேதி சோனியா காந்தி பங்கேற்கும் காரைக்குடி விவசாய, மகளிர் பேரணிப் பொதுக் கூட்டத்திற்கு தமிழகமெங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அலைகடலென திரண்டு வர அன்புடன் வேண்டுகிறேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை எளிய மக்கள் ஏற்றம் காண, குறிப்பாக விவசாயிகள் மற்றும் மகளிர் வாழ்வில் புத்தொளி பெற்றிட அற்புதமான பட்ஜெட்டை அண்மையில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து சோனியா காந்தி தமிழகம் வருகிறார்.
எனவே அவரது வருகை வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய முத்திரை நிகழ்ச்சியாகும். எத்திசையும் புகழ் மணக்க அந்நிகழ்ச்சியை நடத்திக் காட்டிட தமிழகத்தின் அனைத்து பாதைகளும் காரைக்குடியை நோக்கியே செல்கிறது என்ற மகத்தான பெருமையை உருவாக்கிட காங்கிரஸ் தோழர்கள் அனைவரும் உற்சாகத்தோடு உணர்வோடு இந்த நேரம் முதல் பணியாற்றிட வேண்டும்.
காரைக்குடி நகர் மக்கள் கடலால் நிரம்பிட, சோனியா காந்தியின் மனம் குளிர்ந்திட அலை அலையாய் வாரீர் என அன்போடு அழைக்கிறேன் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.