''மத்திய அரசின் 6வது ஊதியக்குழுவின் பரிந்துரையில் ஊதிய உயர்வு 2.5 விழுக்காடு என்று கூறியிருப்பது மிகவும் குறைவானது'' என்று அகில இந்திய ஆசிரியர் கூட்டணி கூறியுள்ளது.
இது குறித்து அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்பதால் தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஊதிய உயர்வு எதிர்கால விலையேற்றத்திற்கு 10 ஆண்டுகளுக்கு அடிப்படை செலவினங்களை ஆசிரியர்கள் தாக்குப் பிடிக்க முடியுமா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
ஊதியக் குழு சிபாரிசு அடிப்படையில் கிடைக்க வேண்டிய நிலுவைகளை இரண்டு தவணைகளாக அரசு வழங்கிட வேண்டும் என்றாலும் குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை. இதுபோன்ற பல அம்சங்கள் ஏமாற்றத்தை அளித்துள்ளன.
ஓய்வூதியப் பிடிப்பில் ஊழியர்களின் வைப்பு நிதி தொகைகளை பங்குச் சந்தையில் திணிப்பது என்பது கொடுமையானது. புதிதாக ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த ஊதியக் குழு ஊக்குவித்திருப்பது, மத்திய அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் இலவசமாக பெற்று வந்த மருத்துவ சிகிச்சைக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.
ஊதிய உயர்வு 2.5 விழுக்காடு என்பது மிகவும் குறைவானதாகும். உற்பத்தி அடிப்படையில் போனஸ் என்பது ஆசிரியர்களுக்கு எப்படி பொருந்தும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் கூட்டணி மத்திய அரசை வலியுறுத்தி கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளது என்பது நிதர்சனமான உண்மையாகும் என்று ஈஸ்வரன் கூறியுள்ளார்.