''என்.எல்.சி. நிர்வாகம் தனது பிடிவாதப் போக்கைக் கைவிட்டு உடனடியாகப் பிரச்சனைக்கு தீர்வுகண்டு நெய்வேலி மின்உற்பத்தி தடையின்றி நடைபெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு தர வேண்டிய போனஸ் தொகையை வழங்கும் தேதியை நிர்வாகம் அறிவிக்க மறுத்து வருகிறது. அதோடு சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையையும் நிர்வாகம் ஏற்கத் தயாராக இல்லை.
எனவே தான் என்.எல்.சி நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. என்.எல்.சி நிர்வாகத்தின், தொழிலாளர் விரோதப் போக்கு கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டு, தொழில் உற்பத்தியும், விவசாய உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மக்களின் தேவைக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலால், என்.எல்.சி. நிர்வாகத்தின் தற்போதைய அணுகுமுறை மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறோம்.
எனவே என்.எல்.சி. நிர்வாகம் தனது பிடிவாதப் போக்கைக் கைவிட்டு உடனடியாகப் பிரச்சனைக்கு தீர்வுகண்டு நெய்வேலி மின்உற்பத்தி தடையின்றி நடைபெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.