''இலங்கை பிரச்சனைக்கு அமைதிவழி தீர்வு காண தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் கேட்டுக் கொண்டார்.
சடடப் பேரவையில் இன்று நடந்த பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் பேசுகையில், இலங்கையில் வடக்குப் பகுதி, கிழக்குப் பகுதி என்று தமிழர்கள் வாழும் பகுதியை பிரித்து வைத்து இலங்கை அரசு அந்த மக்களுக்கு தொடர்ந்து கொடுமை இழைத்து வருகிறது.
ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மீறி பல்வேறு மனித உரிமை மீறல் நடந்து வருகிறது. அங்கே உள்ள பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து நமது கடற்பகுதிக்கும் வந்து தமிழக மீனவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே, இலங்கையின் உள்நாட்டு பிரச்சனையாக இதை கருதி விடாமல் அங்கே அமைதி வழி தீர்வு காண்பதற்காக ஒரு தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
அதே போல நாம் நட்பு அடிப்படையில் வழங்கிய கச்சத் தீவை இரு நாடுகளுக்கும் சம பங்கு என்ற ரீதியில் கொண்டு வரவேண்டும் என்று குணசேகரன் கூறினார்.