தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
தமிழகத்தில் மருத்துவம், பொறியியல், விவசாயம் போன்ற தொழில்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணையும், பிளஸ்-2 மதிப்பெண்ணையும் கணக்கிட்டு கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நுழைவுத்தேர்வு முறையை தமிழக அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அரசு தெரிவித்தது.
இந்த சூழ்நிலையில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பி.முகிலாதேவி, வினோத்குமார், டி.மனோ ஆபிரகாம் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், நுழைவுத்தேர்வு அடிப்படையில் மட்டுமே மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றும் இல்லையேல் தகுதியுள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது சரிதான் என்று ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லாதது என்று அறிவிக்க வேண்டும் என்றும் மனுக்களில் கூறியிருந்தனர்.
இந்த மனுக்கள் இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
வழக்கு தொடர்ந்த மாணவி முகிலாதேவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் ஜேத்லி தமிழக அரசு நடப்பு ஆண்டின் தனது நிலையை தெரிவிக்க வேண்டும் என்றார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஞ்சய் அர்ஜுனா, அபி ஷேக் சிங்க்வி ஆகியோர் தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம், அகில இந்திய தொழில் கல்வி கவுன்சிலர் அங்கீகாரம் அளித்துள்ளது என்றனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷ்ணன், அப்தாப் அலாம் ஆகியோர் தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தர விட்டனர்.
வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைத்தனர். தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.