சென்னை மாநகராட்சி மயானங்களில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இலவசமாக உடல் தகனம் செய்யப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்னையில் மாநகராட்சி மயானங்கள் 38 உள்ளது. இந்த மயானங்களில் குழந்தைகள் உடல் தகனத்துக்கு ரூ.250-ம், பெரியவர்களின் உடல்களைப் புதைப்பதற்கு ரூ.400, எரிப்பதற்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
சாதாரண ஏழை, எளியவர்கள் இறந்து போன உறவினர்களின் உடல்களை தகனம் செய்யும் போது கட்டணம் செலுத்த முடியாமல் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.
இந்த வேதனையை போக்க மயானங்களில் உடல்களை புதைப்பதற்கும் எரிப்பதற்கும் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன்படி வருகிற 1-ஆம் தேதி முதல் மயானங்களில் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது" என்றார்.