அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழகம் வருவதை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது.
சோனியா காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். ஆருண் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம், வசந்த குமார், விஷ்ணு பிரசாத், சுந்தரம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார், மாணவர் காங்கிரஸ் தலைவர் நவீண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எம்.கிருஷ்ணசாமி, "அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏப்ரல் 5 ஆம் தேதி காலை விமானம் மூலம் திருச்சி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் காரைக்குடி செல்கிறார்.
பல்கலைக்கழக விழாவில் பங்கேற்ற பிறகு, விவசாயிகள் மற்றும் மகளிர் அணி பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். பின்னர் மீண்டும் திருச்சி வந்து விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்" என்றார்.