விவசாய நிபுணர்களின் ஆலோசனை பெற்று முல்லைப் பெரியாறு, வைகை அணைகளை முன்னதாக தமிழக அரசு திறக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காலம் தவறிப் பெய்த தொடர் மழையின் காரணமாக வைகை, முல்லைப் பெரியாறு அணைகள் நிரம்பி விட்டன. நீர்பிடிப்பு தேவையான அளவு உள்ளதால், வைகை மற்றும் முல்லைப் பெரியாறு அணைகளை உரிய காலத்திற்கு முன்னதாக அதாவது 30 நாட்கள் அல்லது 15 நாட்கள் முன்னதாகக் திறக்கலாம்.
அவ்வாறு செய்தால் 2008-ம் ஆண்டு குறுவை அறுவடை, வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்னரே அதாவது புரட்டாசி முதல் வாரத்திலேயே முடிந்துவிட பெருமளவு வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் விளைவிக்கும் 2008-ம் ஆண்டு குறுவை வெள்ளாமையாவது விவசாயிகளின் வீடுகளுக்கு வந்து சேருவதற்கான வாய்ப்பு உருவாகும்.
இது குறித்து விவாதிக்க வருவாய்த்துறையின் மூத்த அதிகாரிகள், பொதுப்பணித் துறையின் மூத்த பொறியாளர்கள் வேளாண்மைத் துறையின் மூத்த அதிகாரிகள், வேளாண் கல்லூரி விவசாய நிபுணர்கள், விவசாயிகள் சங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய கூட்டத்தை தமிழக அரசு விரைவில் கூட்ட வேண்டும் என்று இல.கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.