கோவையில் உலகத்தரம் வாய்ந்த மத்திய பல்கலைக்கழகம் அமைக்க இருப்பதால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாகத் திகழும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் உலகத்தரம் வாய்ந்த மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள செய்தியை மிகுந்த மகிழ்ச்சியோடு தமிழகம் வரவேற்கிறது.
அதற்காக மத்திய அரசுக்கும், சோனியாவுக்கும், பிரதமர் மன்மோகன்சிங், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன்சிங்கும் தமிழக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம். நிறுவனமும் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது என்ற செய்தியையும் மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் அறிவித்துள்ளார்.
இதுவரை தமிழகத்தில் இந்தக் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படவில்லை. இப்போது இந்த திட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதன் மூலம் தமிழக மாணவர்கள் உயர்கல்விப் பெறுவதற்கு சிறந்த வாய்ப்பாக நம் மாநிலத்திலேயே கிடைக்கும் என்பதால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாகத் திகழும் என்பது நிச்சயம் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.