ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குக்கும் கர்நாடகாவில் அரசியல் கட்சிகளை கண்டித்து மார்ச் 31ஆம் தேதி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரிப் பிரச்சினையில், தமிழகத்துக்கு உரிய நீதி கிடைக்காமல், நமக்குத் தர வேண்டிய தண்ணீரையும் தராமல், கர்நாடக மாநிலம் தொடர்ந்து செய்யும் அநீதியை, மத்திய அரசு தடுக்க முன் வரவில்லை.
நம் மாநில எல்லைக்கு உள்ளேயே வந்து எடியூரப்பாவும், கன்னட வெறியர்களும் ஒகேனக்கல் பகுதிகளைப் பார்வைவிட்டதும் நமது திட்டத்துக்கு எதிராகக் கூச்சல் இட்டதும், விபரீதத்தை விலைக்கு வாங்குகிற வேலை ஆகும்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக மாநில அமைப்புகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கண்டனம் தெரிவிக்கவும், கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் மார்ச் 31ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ம.தி.மு.க. சார்பில் ஒகேனக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ கூறியுள்ளார்.