''தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் விடுக்கப்பட்டு வரும் வாரம் ஒரு நாள் கட்டாய மின்சார விடுமுறை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு மாற்றம் செய்யப்படும்'' என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
தமிழக சட்டபேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அனைத்து தொழிற்சாலைகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளித்தால் 1,500 மெகாவாட் மின்சாரம் யாரும் பயன்படுத்தாமல் வீணாகிறது.
இதனால், தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் தொழிற்சாலைகள் வாரம் ஒரு நாள் கட்டாய மின்சார விடுமுறை அளிக்க வேண்டும் என்று தற்காலிகமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு மாற்றப்பட்டு, முன்புபோல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடலாம் என்ற பழைய முறை மீண்டும் அமலுக்கு வரும்" என்றார்.