தமிழக அரசு சார்பில் சென்னையில் நூறு கோடி ரூபாய் செலவில் நவீன நூலகம் ஒன்றை அமைக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இன்று கையெழுத்தானது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்கால அறிவியல் நூல்கள், நவீன வெளியீடுகள், வரலாற்றுப் பின்னணி கொண்ட பனுவல்கள் மற்றும் மேற்கொள் தொகுப்புகள் போன்றவை சாதாரண மக்களுக்கும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில், சென்னையில் சர்வதேச தரத்திலான நவீன மாநில நூலகம் ஒன்றை ரூ.100 கோடி செலவில் சென்னையில் அமைக்கப்படுகிறது.
சென்னை கோட்டூர்புரத்தில் 8 ஏக்கர் நிலம் நவீன மாநில நூலகம் கட்ட பள்ளிக் கல்வித் துறைக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டது. நூலகம் கட்ட தேசிய மற்றும் சர்வ தேச அளவில் கட்டடக் கலை வல்லுநர்களிடமிருந்து வரைப்படங்கள் சமர்ப்பிக்க விருப்பம் தெரிவிக்கக் கோரி விளம்பரம் செய்யப்பட்டது.
கட்டட வடிவமைப்பாளரைத் தேர்வு செய்ய பொதுப் பணித்துறை, தலைமைப் பொறியாளரை (கட்டடம்) தலைவராகக் கொண்ட மதிப்பாய்வுக் குழுவானது பெறப்பட்ட மாதிரி வடிவமைப்புகளை மதிப்பீடு செய்து சி.ஆர்.நாராயணராவ் நிறுவனத்தை தேர்வு செய்தது.
இந்நிறுவனத்துடன் பொதுப் பணித்துறை விரிவான கட்டட வடிவமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் கட்டட வடிவமைப்பாளர் சி.என். நாராயணராவ் நிறுவனம் சார்பாக சி.என்.ராக வேந்திரன், பொதுப் பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் த.அன்பழகன் ஆகியோர் கையெ ழுத்திட்டனர்.
மே 2008க்குள் கட்டட ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கை வெளியிடவும் அதனைத் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுக்குள் கட்டடம் கட்டி முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.