சட்டப் பேரவையில் 2007-2008 ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். அதில் துணை மதிப்பீட்டில் மொத்தம் ரூ.2198.45 கோடி நிதி ஒதுக்குவதற்கு வகை செய்யப்பட்டிருந்தது.
2007-08 ஆம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகள் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தாக்கல் செய்து நிதி அமைச்சர் அன்பழகன் பேசுகையில், இந்த துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.2,198.45 கோடி நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கிறது. இதில் 921.23 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும், 656.69 கோடி ரூபாய் மூலதன கணக்கிலும், எஞ்சிய தொகையான 620.53 கோடி ரூபாய் கடன் கணக்கிலும் அடங்கும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதலாக ரூ.40.80 கோடியும், புதிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்திட தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பங்கு மூலதன உதவியாக 250 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்க கூடுதலாக ரூ.100 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு கடன் வழங்கிட கூடுதலாக ரூ.300 கோடி தேவைப்படுகிறது.
ஜவஹர்லால் நேரு நகர்ப்புற பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு அடிப்படை வசதி செய்வதற்காக ரூ. 133.06 கோடியும், நபார்டு உதவியுடன் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சாலை பணிகளுக்காக ரூ. 40 கோடியும், பருவ மழையின் போது சேதமடைந்த சாலைகளையும், பாலங்களையும் சீரமைப்பதற்காக ரூ. 128.95 கோடியும் இந்த துணை மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.