''மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஒரு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு மழை, வெள்ள சேதம் குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களும் பேசினார்கள். அவர்களுக்கு பதில் அளித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 8 மடங்கு அதிக அளவு மழை பெய்துள்ளது. இதனால் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
மாநிலம் முழுவதும் 47,257 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் தானியம், பருப்பு வகை பயிர்கள் 2,79,143 ஹெக்டேர் நிலத்தில் சேதமடைந்துள்ளன. சாலைகள், பாலங்கள், ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் சேதமடைந்துள்ளன. இந்த பாதிப்புகளுக்கு போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மத்திய அரசு பேரிடர் இழப்பு சமயத்தில் நிவாரண உதவியாக பாசனப் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்க அனுமதித்துள்ளது. இந்த நிவாரணம் போதாது என்று விவசாயிகள் கோரிக்கை வைத்திருப்பதை ஏற்று இந்த அரசு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,500 வீதம், அதாவது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3,000 வீதம் இழப்பீட்டு தொகை வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவு மாநில அரசின் நிதியிலிருந்து செலவழிக்கப்படும்.
நெற்பயிர்களை தவிர மழையை மட்டுமே நம்பியிருக்கும் மற்ற பயிர்களான வேளாண்மை பயிர்கள், தோட்டப்பயிர்களுக்கு 50 விழுக்காட்டிற்கும் கூடுதலாக இழப்பு ஏற்பட்டிருந்தால், ஹெக்டேருக்கு ரூ.2,000 வீதம் நிவாரண உதவி வழங்கப்படும். இதே பயிர்கள் பாசனப் பகுதிகளில் உள்ள நிலங்களில் பாதிப்படைந்திருந்தால், ஹெக்டேருக்கு ரூ.4,000 வீதம் நிவாரண உதவி வழங்கப்படும்.
மா, புளி போன்ற நிரந்தரப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.6000 வீதம் நிவாரணம் வழங்கப்படும். மாடுகள் இறந்தால் தலா ரூ.10 ஆயிரம் வீதமும், கன்றுகள் இறந்தால் தலா ரூ.5 ஆயிரம் வீதமும், ஆடுகள் இறந்தால் தலா ரூ.1,000 வீதமும் இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.