''சென்னை புறநகர் பயணிகளின் வசதிக்காக 18 இரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன'' என்று மத்திய இரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் வளாகத்தில், தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்தை இயக்கி வைத்து மத்திய இரயில்வே இணை அமைச்சர் வேலு பேசுகையில், சென்னை புறநகர் பயணிகளின் வசதிக்காக 18 இரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதால் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. "ஸ்மார்ட் அட்டை'யை பயன்படுத்துவதும் எளிது. கம்ப்யூட்டர் தொடுதிரையுடன் கூடிய இந்த இயந்திரத்தின் மூலம் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு பயணச் சீட்டுக்களை பெற முடியும். நடைமேடை சீட்டுகளையும் பெற முடியும்.
சென்னை கடற்கரை, கோட்டை, பூங்கா, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, திருமயிலை, தாம்பரம், சேப்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த வசதியைப் பெறலாம்.
ரூ.395 கோடி செலவில் வேளச்சேரி- பரங்கிமலை இடையேயான மெட்ரோ இரயில் திட்டத்துக்கு முதல் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது வேளச்சேரி- புழுதிவாக்கம் இடையே 3 கி.மிட்டர் உள்ளடக்கியதாகும்.
இதேபோல், திருவள்ளூர்- அரக்கோணம் இடையே இருப்பு பாதை அமைக்கும் பணிக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.