சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், ஏழுதேசம், சின்னதுரை கிராமம், விளவங்கோடு தாலுகாவைச் சேர்ந்த மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்கவும் புட்ளம் நீதிபதி பெரரா உத்தரவிட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால், மத்திய அயலுறவுத்துறை அமைச்சகம், சிறிலங்காவில் உள்ள இந்திய தூதரகம், இந்தியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் உதவியுடன் இந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் கன்னியாகுமரிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிகிறது.
தமிழக அரசின் நடவடிக்கையால் கடந்த மார்ச் 10ஆம் தேதி 50 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.