மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண உதவி வழங்குமாறு பிரதமரை சந்தித்து கேட்டுக் கொள்வேன் என்று மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை வாங்கிய பின்னர் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தி.மு.க. சார்பில் அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன், அ.இ.அ.தி.மு.க. சார்பில் பாலகங்காவும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.
இதனை தமிழக சட்டசபை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான செல்வராஜ், கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்பிறகு, அதற்கான அத்தாட்சி சான்றிதழினை தி.மு.க, அ.இ.அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர்.
மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை ஜெயந்தி நடராஜன் நேற்று தேர்தல் அதிகாரி செல்வராஜியிடம் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை பெறுவதற்காக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்தார். தேர்தல் அதிகாரி அறைக்கு சென்ற வாசன், செல்வராஜியிடம் சான்றிதழை பெற்றுக் கொண்டார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுதர்சனம் உடன் வந்தார்.
சான்றிதழை பெற்றுக் கொண்டு வெளியே வந்த ஜி.கே.வாசன், செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு நிவாரண உதவி வழங்ககோரி வலியுறுத்துவேன் என்றார்.
இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் வழங்கும்படியும், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை அறிக்கும்படியும் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையை தமிழக அரசிடம் வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவி கிடைக்க அரசை வலியுறுத்துவோம் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.