மாநில தேசிய சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக லட்சிய தி.மு.க தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று விஜய டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்விஷயத்தில் இலங்கை அரசை எச்சரிக்க வேண்டியது இந்திய அரசு, அங்கு வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு உதவி செய்வது வருத்தம் அளிக்கிறது. இலங்கை ராணுவ தளபதிக்கு இங்கு வரவேற்பு அளிப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
சிங்கள ராணுவத்திற்கு இந்திய அரசு உதவக் கூடாது என்பதை வலியுறுத்தி மார்ச் 29ஆம் தேதி மதுரையிலும், ஏப்ரல் 5ஆம் தேதி சென்னையிலும் லட்சிய தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளேன்.
மாநில தேசிய சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடுவது கூட்டணி கட்சிக்குள் குந்தகத்தை விளைவித்து விடக் கூடாது என்பதற்காகவும் தமிழக முதல்வருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும் இந்த பதவியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்.
என் விலகல் கடிதத்தை முதல்வர் கருணாநிதிருக்கு இன்று அனுப்பி விட்டேன். எக்காரணத்தை கொண்டும் விலகல் கடிதத்தை திரும்ப பெற மாட்டேன் என்று விஜய டி.ராஜேந்தர் கூறினார்.