முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் மகன் பரிமளம் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் மகன் பரிமளம் (வயது 67). இவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார். இவரது மனைவி சரோஜா கடந்த 2 வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு மணிவண்ணன் (43), சவ்மியன் (40) என்ற மகன்களும், இளவரசி (38) என்ற மகளும் உள்ளனர்.
இருதய நோயால் கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் தற்கொலை செய்து கொண்ட பரிமளத்தின் உடல் மிதந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இதுபற்றி நுங்கம்பாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு திருவல்லிகேணி காவல்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் தீயணைப்பு படையினர் உதவியுடன் பரிமளத்தின் உடலை கிணற்றுக்குள் இருந்து மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு பிரேத பரிசோதனை நடந்தது. பின்னர் பரிமளத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அண்ணாதுரையின் மகன் பரிமளம் மறைவுக்கு முன்னாள் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி நேரில் அஞ்சலி
மறைந்த பரிமளம் உடலுக்கு முதல்வர் கருணாநிதி மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், கவிஞர் வைரமுத்து ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.