மன்னார் வளைகுடாவில் இன்று புதிதாக ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக பலவீனமாக உள்ளதால் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கியது குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, உள்துறை செயலாளர் மாலதி, நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன், வருவாய்துறை செயலாளர் அம்புஜ் சர்மா, வருவாய் ஆணையர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.