நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை தமிழக முதலமைச்சர் கருணாநிதி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி கொண்டிருந்த போது அமைச்சர் பொன்முடிக்கு நேற்று லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனால் அவருக்கு விழுப்புரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நேற்று மாலை உடனடியாக போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நலம் மருத்துவர்கள் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடியை தமிழக முதலமைச்சர் கருணாநிதி இன்று நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அவர் விரைவில் குணமடைய தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
முதலமைச்சர் கருணாநிதியுடன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், எ.வ.வேலு ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.