''கச்சத் தீவை மீட்க தமிழக பாரதிய ஜனதா கட்சி நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளது'' என்று தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைத்து கடந்த 74ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு கடைபிடிக்கவில்லை.
தமிழக மீனவர்கள் அங்கு மீன் பிடிக்கக்கூட அனுமதியில்லை. எனவே கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சி நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய தலைமையுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றதிலிருந்து விலைவாசி உயர்ந்துகொண்டே உள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் 50 சதவீத அளவு உயர்ந்துள்ளது. ஆனால் நிதியமைச்சர் சிதம்பரமோ விலைவாசி உயர்வை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது என்கிறார். மக்கள் சந்திக்கும் பிரச்சனை அவருக்கு தெரியவில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு ஒதுக்குகிற நிவாரணம் போதாது. சேதத்துக்கு தகுந்தாற்போல இழப்பீடு தர வேண்டும். அந்த நிவாரண தொகையை தாமதமின்றி தரவேண்டும்.
ஓகேனக்கல் தமிழகத்துக்கு சொந்தமானது. ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதனால் கர்நாடகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதுதான் எங்களது ஒரே நிலைப்பாடு. தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது காலம் கனிந்தபின்பே தெரியவரும் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.