தென் மாவட்டங்களில் பெய்த பலத்த மழைக்கு இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் இன்று பலத்த மழை பெய்து வருகிறது.
தென் மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் இதுவரை மழைக்கு 20 பேர் பலியாகி இருந்தனர். ஆனால் இன்று காலையில் மழை சாவு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
கோவை, நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 4 பேர் இறந்துள்ளனர். விருதுநகர், விழுப்புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் பலியாகியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். கன்னியாகுமரி, திருச்சி, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழையால் பல்வேறு பகுதிகள் மழை நீரால் சூழ்ந்துள்ளது. மயிலாப்பூரில் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து கார்கள் சேதம் அடைந்தன. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
சென்னை ஐஸ்அவுசில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் அகமது (45) என்பவர் பலியானார்.
சென்னையில் இன்று பலத்த மழை!
சென்னையில் இன்று காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலை 11.30 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் மெதுவாக சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழை நீர் இன்னும் வடியாத நிலையில் இன்று பலத்த மழை பெய்து வருகிறது. ஒரு நாள் பெய்த மழைக்கு தாக்கு பிடிக்காத சென்னை நகரம் தற்போது பெய்து வரும் மழையால் தத்தளிக்கிறது.