நல வாரியங்களின் மொத்தப் பணியும் வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கையில், நல வாரியங்களை வருவாய்த் துறையிடம் ஒப்படைத்தது பற்றி கம்யூனிஸ்டு கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்களே?
நல வாரியங்களின் மொத்தப் பணியும் வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை. சிறிய சிறிய கிராமங்களில் உள்ளவர்களுக்கு நல வாரியங்கள் சார்பில் உதவி அளிக்க முன் வரும்போது, அவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க ஒவ்வொரு கிராமத்திலும் வேறு துறைகளின் சார்பாக அரசு அலுவலர்கள் கிடையாது. வருவாய்த் துறை அலுவலர்கள் தான் ஒவ்வொரு கிராமத்திலும் அரசு அலுவலர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மூலம் தான் தகவலைச் சேகரிக்க இயலும்.
இதை எண்ணியே மிகுந்த யோசனைக்குப் பிறகு பரிட்சார்த்தமாக ஆறு மாத காலத்திற்கு தற்போது வருவாய்த் துறையிடம் ஒருசில பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று சொல்லியிருக்கிறேன். அரசின் சார்பில் நடைபெறும் காரியங்களாயினும், வாரியங்களாயினும் முதல்-அமைச்சர் கண்காணிப்பில் நடைபெறும்போது வீண் கவலை எதற்காக?
வெள்ளம், பெரு மழை காரணமாக ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் ஏற்கனவே பெருமழை பெய்த போது, அவர் அறிக்கை விடுத்த பிறகுதான் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்க்க நீங்கள் சென்றதாகவும், உடனடி தேவைக்காக கடந்த முறை 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிதியில் 56.5 கோடி ரூபாய் தான் செலவழிக்கப்பட்டதாக நிதி நிலை அறிக்கையிலே கூறப்பட்டுள்ளதாகவும் சொல்லியிருக்கிறாரே?
கடந்த முறை அவர் அறிக்கை விட்ட பிறகுதான் நான் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்கச் சென்றதாகச் சொல்வது; சுத்தப் பொய்! 200 கோடி ரூபாய் கடந்த முறை நிதி ஒதுக்கியதில் 56.5 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப் பட்டதாக நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று சொல்லியிருக்கிறார். நுனிப்புல் மேயக் கூடாது.
வேளாண்மைத் துறை வாயிலாக, இதுவரை பாதிக்கப்பட்ட 3,60,954 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்ட தொகை மட்டும் தான் 56.5 கோடி ரூபாய். இந்தத் தொகையும், சாலைப்பணிகள், ஏரி மற்றும் குளம் பராமரிப்பு, நிவாரண உதவித் தொகை, பாலங்கள் பழுதுபார்த்தல் போன்ற மற்ற பணிகளுக்கெல்லாம் சேர்த்து இதுவரை 143 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு, மீதம் 57 கோடி ரூபாய் அரசின் இருப்பிலே உள்ளது. அந்தத் தொகையும், தற்போது பெய்துள்ள பெருமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக பயன்படுத்தப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.