இலங்கையில் தமிழர்களை அழித்தொழிக்கும் சிறிலங்க ராணுவத்திற்கு ஆயுத உதவியோ, பயிற்சியோ அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தி சென்னையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
சென்னை விக்டோரியா மெமோரியால் ஹால் எதிரில் இன்று 4 மணிக்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், ஏராளமானவர்கள் கூடி மத்திய அரசை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதில் பெரியார் திராவிடர் கழகத்தின் ஆனூர் ஜெகதீசன், தமிழ் தேச விடுதலை இயக்கத்தின் செயலர் தியாகு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே, சிறிலங்க அரசிற்கு மத்திய அரசு ராணுவ உதவி செய்வதை கண்டித்து வரும் 28 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.