தமிழகத்தில் மழை நீடிக்கும்! பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!
, சனி, 22 மார்ச் 2008 (17:00 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மழையால் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி, மாலத்தீவு கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மழையால் வீடுகள் இடிந்து விழுந்தது, மின்னல் தாக்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.தமிழகத்தில் பெய்து வரும் இந்த தொடர் மழையால் 270 கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதில் 10 கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருவாரூர், தஞ்சை, நாகபட்டினம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, தென் தமிழகத்தில் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. உபரி நீர் ஆறுகளில் திறந்து விடப்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளன. பயிர்கள் சேதமடைந்துள்ளன.
மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ஆற்றையொட்டி வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு கடந்த இரு நாட்களாக பல மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்ததால் உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்களில் நீர் தேங்கி உள்ளது. இதனால் உப்பு உற்பத்திபெருமளவில் பாதிப்படைந்துள்ளது.
பலத்த காற்று காரணமாக கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தமிழகத்தில் கன மழையினால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய முதல் கட்டமாக ரூ.100 கோடி நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1லட்சம் வழங்கப்படும் என்றும், பயிர்ப் பாதிப்புக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.4,000 வீதம் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.