தமிழகத்தின் நிதிநிலை வலுவாக உள்ளது என்றும் அண்மைக் காலத்தில் முதல்முறையாக வருவாய் கணக்கில் உபரி காட்டப்பட்டுள்ளது என்றும் நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் 2008-09ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் அன்பழகன் இன்று தாக்கல் செய்த பிறகு செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக அரசின் நிதிநிலை மிகவும் வலுவாக உள்ளது. அறிவிக்கப்பட்ட வரிச்சலுகைகளால் அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு இருக்காது.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டதையடுத்து கூட்டுறவு வங்கிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நிதி இழப்பிட்டிற்கு ஈடு செய்யப்பட்டு வருவதால் விவசாயிகளுக்கு வங்கிகள் புதிய பயிர்க்கடன்களை வழங்க முடிகிறது.
கடந்த பல ஆண்டுகளில் முதல் முறையாக தற்போது வருவாய் கணக்கில் ரூ.84 கோடி ரூபாய் உபரி காட்டப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் நிதிநிலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அயல்நாட்டு மது மீதான வரி விதிப்பு மூலம் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. வாட் வரிவிதிப்பு, கலால் வரிவிதிப்பின் மூலம் இந்த வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது.
நிதி பற்றாக்குறையை பொருத்த வரை 2.98% என்ற கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதால் மாநிலத்தின் நிதிநிலை சிறப்பாக உள்ளது. இதனால் வங்கிகள் மூலம் பெறப்படும் கடன்கள் குறைந்த வட்டி விகித்திலேயே கிடைக்கிறது என்று ஞானதேசிகன் கூறினார்.