திருநெல்வேலி மாவட்டம். வள்ளியூர்-ஆரல்வாய்மொழி இடையே இன்று அதிகாலை மதுரை-கொல்லம் பயணிகள் இரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த பயணிகள் இரயிலின் எஸ்-2, எஸ்-3 ஆகிய பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தது. அதற்கு பின்னால் வந்த 5 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகியது. இதனால் 7 பெட்டிகள் திடீரென தடம் புரண்டதால் பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் உயிர் பயத்தில் அலறினர்.
இந்த விபத்தில் பயணிகள் 12 பேர் படுகாயமடைந்தனர். மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
இதுபற்றி தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரகாஷ், இரயில்வே, காவல்துறை உயர் அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் ஆகியோர் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து பயணிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இரயில் விபத்தை தொடர்ந்து அந்த வழியாக செல்லும் அனைத்து இரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில இரயில்கள் மாற்று வழியில் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் தாமதமடைந்துள்ளது.
விபத்து குறித்து இரயில்வே உயர் அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.