சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கி கோயிலைத் தமிழக அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.
இது குறித்துச் சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை ஏற்று நடத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே துவங்கி விட்டன. ஆனால், தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
இருப்பினும், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கி சிதம்பரம் நடராஜர் கோயிலைத் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" என்றார்.
"தமிழகத்தில் மொத்தம் 38,480 கோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும், சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் போதிய வருவாய் இல்லாததால் முறையாகப் பூஜை நடத்த முடியவில்லை. இந்த நிலையை மாற்றுவது குறித்து கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்" என்றார் அமைச்சர்.