இலங்கை இனவாத அரசுக்கு செய்யும் எந்தவிதமான இராணுவ உதவியையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
இலங்கைத் தீவின் இலங்கைத் தமிழர்களை அடியோடு அழித்துவிட வேண்டும் என்று செயற்பட்டு வரும் இலங்கை அரசின் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வருவதைக் குறிப்பிட்டு, எனது வேதனையையும், கவலையையும் வெளிப்படுத்தி, நான் தங்களுக்கு 9.12.2007, 18.12.2007, 25.01.2008 ஆகிய நாட்களில் எழுதிய கடிதங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், தாங்கள் 05.03.2008 தேதியிட்டு எனக்கு எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன்.
தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளபடி, இலங்கைக் கடற்படையினரால் மிருகத்தனமாக கொலைசெய்யப்பட்டு வரும் தமிழக மீனவர்களின் உயிர்ப்பிரச்சனையை, இந்திய அரசு மிகவும் மெத்தனப்போக்கோடு அணுகுவது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
இந்திய மீனவர்கள் மீது மென்மேலும் தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசைக் கடுமையாக எச்சரிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை அல்லவா?
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுட்டுத் தள்ளுவதும், கொல்லுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இலங்கைக் கடற்படையினர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று இந்திய அரசு அவர்களிடம் வலியுறுத்தி இருப்பதாகத் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளீர்கள்.
இந்தியக் கடற்படை எந்த நடவடிக்கையும் இன்றி, ஒரு நொண்டி வாத்தைப்போல சோம்பேறித்தனமாக இலங்கைக் கடற்படையின் கொலை வெறித் தாக்குதல்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது என்ற வலுவான குற்றச்சாட்டுகளை நான் கூறி உள்ளேன்.
எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப்போல, இந்தியக் கடற்படை அதிகாரிகள், இலங்கைக் கடற்படையின் தவறான தகவல்களையும், பொய்யான அறிக்கைகளையும் ஆமோதித்து அடிக்கடி செய்தி வெளியிடுகிறார்கள்.
நமது மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்திய பெரும்பாலான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், இலங்கைக் கடலோரத்தில், இலங்கை நீர்ப்பரப்பில் நடந்தவைகள் என்று தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பது எனக்குப் பெரும் மனவேதனையை அளிக்கிறது.
தாங்கள் அவ்வாறு உறுதிபடக் கூறி இருப்பது உண்மைக்கு மாறானதாகும். பெரும்பாலான தாக்குதல்கள் சர்வதேச நீர்ப்பரப்பில் நடைபெற்றனவே தவிர, இலங்கை நீர்ப்பரப்புப் பகுதியில் அல்ல. அண்மையில், கச்சத்தீவு அருகே ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது.
இலங்கைக் கடற்படையினருக்கு என்ன உரிமை இருக்கிறது?
கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி, அந்த இடத்தில் மீன்பிடிப்பதற்கு நமது மீனவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. வாதத்திற்காக ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். இந்திய மீனவர்கள் கவனக்குறைவினால் இலங்கை நீர்ப்பரப்புக்கு உள்ளே சென்றுவிட்டாலும்கூட, அவர்களைச் சுட்டுக்கொல்வதற்கு இலங்கைக் கடற்படையினருக்கு என்ன உரிமை இருக்கிறது?
இலங்கைக் கடற்படையினர் சர்வதேச நீர்ப்பரப்பில், கடலுக்கு அடியில் தண்ணீருக்கு உள்ளே கண்ணிவெடிகளை வைத்து இருப்பதாகப் பகிரங்கமாக, தைரியமாக அறிவித்துவிட்டு இந்திய மீனவர்களின் மீன்பிடி படகுகள் சர்வதேச நீர்ப்பரப்பு பகுதிக்குச் சென்றால் அவர்கள் பேராபத்தைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
இறையாண்மை கொண்ட எந்த நாடும், அண்டை நாட்டின் இத்தகைய ஆபத்தான செயல்பாட்டை நிச்சயமாகப் பொறுத்துக் கொள்ளாது. ஆனால், இந்திய அரசு இந்த மிக முக்கியமான பிரச்சனையை கவனத்தில் கொள்வதை வேண்டும் என்றே தவிர்த்து வருகிறது.
நமது முப்படை அதிகாரிகளும், இலங்கை இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து கூட்டாகச் செயற்பட்டு வருகிறார்கள். இதனால், நமது கடற்படை அதிகாரிகள் உண்மைச் செய்திகளைத் திட்டமிட்டு மறைத்துவிட்டு, பொய்யான தகவல்களை அரசுக்கு அறிக்கையாக அளிக்கிறார்கள் என்பது தங்கள் கடிதத்தின் மூலம் தௌ்ளத் தெளிவாக வெளிப்படுகிறது.
தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து வேண்டும் என்றே இந்திய அரசு தவறி இருப்பது தமிழர்களுக்குச் செய்யும் பெரும் துரோகம் ஆகும்.
இந்திய அரசை ஏமாற்றிய இலங்கை அரசு!
இலங்கை அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத்திருத்தத்தை, இலங்கை அரசு அமுல்படுத்துவதை இந்திய அரசு வரவேற்பதாகத் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளீர்கள்.
இந்திய அரசு, இலங்கை அரசால் மிக எளிதாக ஏமாற்றப்பட்டு உள்ளது என்பது மிகவும் பரிதாபத்துக்கு உரிய ஒன்று ஆகும்.
1987 ஆம் ஆண்டில் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி பொதுமக்களால் வாக்கு அளிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டால், இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் திட்டத்தை இலங்கை அரசு கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தள்ளுபடி செய்யும் முயற்சியில் ஈடுபட்டது.
இந்தியா இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால், வேண்டும் என்றே வெளிப்படையாகவே தவிர்த்து விட்டது. 13 ஆவது சட்டதிருத்தம் என்பது தமிழர்களால் நீண்டகாலத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. முன்பே தமிழ் மக்களால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒன்று.
நார்வே நாடு மேற்கொண்ட அமைதிப் பேச்சுகளை, நாச வேலையில் ஈடுபட்டு இலங்கை அரசு முறியடித்தது. பல நாடுகளிடம் இருந்தும் ஆயுதங்களை வாங்கிக் குவித்து, தமிழர்கள் மீது இனவெறி, கொலைவெறித் தாக்குல் நடத்தி வருகிறது.
தமிழர்களின் இதயத்தில் ஒரு கறுப்பு நாள்!
இலங்கையில் வாழும் தமிழர்கள் பசியாலும், பட்டினியாலும், போதிய மருந்துப் பொருட்கள் இல்லாமல் நோய்வாய்ப்பட்டும் இறந்து கொண்டும் இருக்கிறார்கள். செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் ஈழத் தமிழர்களுக்கு உதவுவதாக, மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களையும், மருந்துகளையும் அனுப்புவதற்கு, இந்திய அரசு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுமதி மறுத்தது.
ஜனநாயக முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் சென்ற வாரம் கொலை செய்யப்பட்டார். இதுவரை தமிழர் ஆதரவு பெற்ற நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை அரசின் படையினரால் கொலை செய்யப்பட்டு உள்ளார்கள்.
இந்திய அரசு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொலைக்குக் கண்டனம் தெரிவிக்கத் தவறியது ஏன்பது மிகுந்த வருத்தத்துக்கும், அவமானத்துக்கும் உரிய செயலாகும்.
ஆனால், இதற்கு மாறாக, இலங்கை அரசு தனது இராணுவ தாக்குதல்களைத் தொடர்வதற்கு உதவியாக இந்திய அரசு அவர்களுக்கு ரேடார்களையும், இராணுவத் தளவாடப் பொருட்களையும் தாராளமாக வழங்கியது.
இலங்கை இனவாத அரசின் இராணுவத் தளபதி, தமிழர்களின் குருதி தோய்ந்த கைகளுக்குச் சொந்தக்காரரான, எந்தத் தகுதியும் இல்லாத சரத் பொன்சகாவுக்கு இந்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்த அந்த நாள் தமிழர்களின் எண்ணத்திலும், இதயத்திலும் ஒரு கறுப்பு நாள் ஆகும்.
இந்திய அரசு அளித்த வரவேற்பாலும், ஆதரவாலும் துணிச்சல் பெற்ற கொலைவெறி பிடித்த இலங்கை இராணுவத் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா, தமிழ்ப் போராளிகளை முற்றிலும் அழிப்பதற்கு இந்தியாவின் உறுதியான திட்டமிட்ட உதவியோடு எங்களது இராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என்று சவால் விட்டுப்பேசுகிறார்.
இவ்வாறு எக்காளமிட்டுப் பேசும் இலங்கை இராணுவத்தின் தலைமை தளபதி சரத் பொன்சேகாவின் பேச்சுக்கு, இந்நாள் வரை எந்தவித மறுப்போ, கண்டனமோ இந்திய ஆரசால் தெரிவிக்கப்படவில்லை.
இலங்கைக்கு ராணுவ உதவி கூடாது!
மேலும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி யாதெனில், இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய விமானப் படை விமானிகள் இலங்கை விமானப்படை விமானிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
புகழ்மிக்க பாராட்டுதலுக்கு உரிய பண்டிதர் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரால் தொலைநோக்குப் பார்வையோடு பின்பற்றப்பட்ட, பாராட்டுதலுக்கு உரிய இந்திய வெறியுறவுக் கொள்கையானது, இன்றைக்கு ஆயிரமாயிரம் அடிகளுக்குக் கீழே குழி தோண்டிப் புதைக்கப்பட்டு இருப்பது மிகவும் பரிதாபத்துக்கு உரியது.
இந்திய அரசாங்கத்தின் செயற்பாடு, அணுகுமுறை எண்ணம் அனைத்தும் இலங்கை அரசின் இனவெறித் தாக்குதலுக்குப் பேருதவியாக இருக்கிறது என்ற எண்ணம் தமிழர்கள் மனதிலே துன்பத்தையும் ஏமாற்றத்தையும் நம்பிக்கை இன்மையையும்
விதைத்து வருகிறது.
எனவே, இந்திய அரசு இலங்கைக்கு அளித்த ரேடார்களைத் திரும்பப்பெற வேண்டும் என்றும், இலங்கை இனவாத அரசுக்கு செய்யும் எந்தவிதமான இராணுவ உதவியையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.