பெரம்பலூரில் 12 வயது சிறுமிக்கும், 13 வயது சிறுவனுக்கும் இன்று நடக்க இருந்த திருமணத்தை தொண்டு நிறுவனம் ஒன்று காவல்துறை உதவியுடன் தடுத்து நிறுத்தியது.
தென் இந்திய நுகர்வோர்கள் பாதுகாப்பு சமுதாய அமைப்பின் மாநில மகளிர் பிரிவு துணை செயலாளர் மும்தாஜ், அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் இந்த சிறுமியின் திருமணத்தை உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது மகள் செல்வராணி. இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறாள்.
சிறுமியின் தந்தை பாண்டியனும், ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பாளயத்தார் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் வளர்ந்து வரும் தங்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
திருமணம் நடக்க இருந்த கார்த்திக் என்ற அந்த சிறுவன் பாளயத்தில் உள்ள ஒரு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். சமீபத்தில்தான் தனது தாயை பறிகொடுத்தான்.
சிறுமி செல்வராணி தனக்கு திருமணம் நடப்பதை பற்றி நேற்று தனது பள்ளி தோழிகளிடம் கூறினாள். இதுபற்றி அவளுடைய தோழிகள் அவர்களுடைய பள்ளி ஆசிரியர்களிடம் கூறினர்.
இந்த தகவல் தென் இந்திய நுகர்வோர்கள் பாதுகாப்பு சமுதாய அமைப்பின் மாநில மகளிர் பிரிவு துணை செயலாளர் மும்தாஜ்க்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் மும்தாஜ், அவருடைய அமைப்பைச் சேர்ந்தவர்களும் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் சிறுமி செல்வராணியை மீட்டு, அருகிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அதிகாரி பாஸ்கரன் சிறுமியின் தாய் செல்லம்மாளை காவல் நிலையத்துக்கு வரவழைத்து குழந்தைகள் திருமணம் சட்டப்படி குற்றம் என்று எச்சரிக்கை செய்தார்.
பின்னர் சிறுமியின் தாய், உறவினர்களிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டு அவர்களுடன் அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.