தமிழக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நிலம் வாங்கியதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றும் இதனால் அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை என்றும் தமிழக சுற்றுலா, பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்த் திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் என்னுமிடத்தில் நிலம் வாங்கியுள்ளார். கடந்த வருடம் ஜனவரி மாதம் 4ஆம் தேதி இந்த நிலத்தை விற்றவருடன் பதிவுத்துறை அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பதிவு செய்துள்ளார்.
ரஜினிகாந்த் வாங்கியுள்ள இந்த நிலத்தின் அன்றைய மதிப்பு ரூ.20,03,963.50 ஆகும். ஆனால் அவர் நிலத்தின் மதிப்பையும் விட 96,036.50 அதிகமாக செலுத்தி ரூ.21 லட்சத்துக்கு பதிவு செய்துள்ளார்.
மேலும், முத்திரைத்தாள் கட்டணமாக ரூ.1,68,000ம் செலுத்தியுள்ளதோடு, பதிவுக்கட்டணமாக ரூ.21 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆகையால், இந்த நில விற்பனையில் அரசுக்கு எந்தவித வருமான இழப்பும் ஏற்படவில்லை என்றும் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் அமைச்சர் சுரேஷ் ராஜன் கூறியுள்ளார்.