உலக கேரம் விளையாட்டு போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்ற இளவழகிக்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இளவழகி, கேரம் விளையாட்டில் 1997-ஆம் ஆண்டிலிருந்து சப்- ஜூனியர் மாநில சாம்பியன். இவர் இதுவரை 37 பதக்கங்களையும், கோப்பைகளையும் வென்றுள்ளார். அமெரிக்கா, இலங்கை, மாலத்தீவு ஆகிய இடங்களில் நடைபெற்ற உலகப் போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பதக்கங்களை பெற்றுள்ளார்.
மேலும் சார்க் சாம்பியன் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களையும், ஆசிய சாம்பியன் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார். தமிழ்நாட்டில் பெண் கேரம் சாம்பியன்களில் முதல் ரேங்கிலும் மற்றும் இந்திய பெண் ரேங்கில் 3-வதாகவும் உள்ளார்.
சமீபத்தில் 13.2.2008 முதல் 17.2.2008 முடிய பிரான்சில் உலக கேரம் சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டியில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று தமிழகத்திற்கு புகழ் சேர்த்துள்ளார். இவருக்கு மேற்படிப் போட்டியில் கலந்து கொள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ.30 ஆயிரம் விமானப் பயணக் கட்டணம் வழங்கியுள்ளது.
தமிழக அரசு உலக, பண்ணாட்டு மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரியும் விளையாட்டு வீரர்கள், வீராங் கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கி கவுரவித்து வருகின்றது. இதன் அடிப்படையில் இளவழகி, உலக அளவு கேரம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளதால், இவரது சாதனைகளைப் பாராட்டி தமிழக முதலமைச்சர் கருணாநிதி இன்று அவரது அலுவலகத்தில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை இளவழகிக்கு வழங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.