''தொழிலாளர் நலவாரியப்பணிகளை வருவாய் துறைக்கு ஒப்படைப்பு செய்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்'' என்று அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர் நல வாரியப்பணிகளை தமிழக அரசு வருவாய் துறைக்கு ஒப்படைப்பு செய்து கடந்த 4ஆம் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. 1.4.2008ஆம் தேதி முதல் இந்த அரசாணை அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தொழிலாளர் நல சட்டங்களையும், திட்டங்களையும் அமல்படுத்துவதற்காகவும் தொழிற்சங்க உரிமைகளைப் பேணிக் காப்பதற்காகவும், தொழிற் தகராறுகளுக்குத் தொழில் தாவா சட்டப்படி தீர்வு காண்பதற்காகவும், ஒரு தனித்துறை தேவை என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் தொழிலாளர் நலத்துறை. அந்த தொழிலாளர் நலத் துறையின் பணிகளை வருவாய் துறையிடம் ஒப்படைப்பது நியாயமானதல்ல.
இந்த அரசாணையால் லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதுடன் தொழிலாளர் நல வாரியத்தை வருவாய் துறையில் இணைப்பது என்பது தொழிலாளர்கள் பதிவு பெறுவதிலும், நலத்திட்ட உதவிகள் பெறுவதிலும் தேவையற்ற கால தாமதத்தை ஏற்படுத்தும். தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைக்கும் தி.மு.க அரசின் இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.