''கர்நாடகத்தில் சட்டமன்ற பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை மனதில் கொண்டு அரசியல் ஆதாயம் தேட ஓகேனக்கல் பிரச்சினையை எடியூரப்பா கையில் எடுத்திருக்கிறார்'' என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகா பா.ஜ.க. மாநிலத்தலைவர் எடியூரப்பா ஓகேனக்கல் பகுதிக்கு வந்து பொய்மூட்டையை அவிழ்த்துவிட்டு போயிருக்கிறார். மொழி வழி மாநிலங்கள் எல்லை பிரிக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழக எல்லைக்குள் சேர்க்கப்பட்டு நீடித்து வரும் ஓகேனக்கல் பகுதி கர்நாடகத்துக்கு சொந்தம் என சொல்வது அப்பட்டமான பொய்.
அதிலும் இது மாதிரியான உண்மைக்கு மாறான எல்லைப்பிரச்சினையை தேவையில்லாமல் கிளப்புவது எவ்வளவு விபரீத விளைவுகளை உருவாக்கும் என்பதை எடியூரப்பா எண்ணிப்பார்க்க வேண்டும். கர்நாடகத்தில் சட்டமன்ற பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை மனதில் கொண்டு அரசியல் ஆதாயம் தேட இந்த பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள்.
ஓகேனக்கல் இடைத் திட்டுப்பகுதி, சிற்றருவி தமிழ்நாட்டுக்கு சொந்தமானது. இதற்கு முன்பு இதே பிரச்சினையை கிளப்பிய போது, 2005-ல் தமிழகத்தின் சார்பில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர், அதிகாரிகள், கர்நாடகம் சார்பில் அதிகாரிகளும் எல்லை வரைபடத்தை வைத்து ஆய்வு செய்து இப்பகுதிகள் தமிழ்நாட்டுக்கு சேர்ந்தது உறுதி செய்யப்பட்டது. அவ்வப்போது, தேவையில்லாமல் சுய அரசியல் ஆதாய விளம்பரத்துக்கு எல்லை பிரச்சினையை பேசி, இரு மாநிலங்களின் சகோதர நல்லுறவு மேலும் சிக்கல் ஆக்கிவிட முயற்சிப்பது நல்லதல்ல.
இப்படி எடியூரப்பா விரும்பினால், காவிரி உற்பத்தியாகும் குடகு பிரச்சினைக்கும், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகத்துக்கு சேர்க்கப்பட்ட பெங்களூர், கோலார் இன்னும் பல்வேறு பகுதிகள் எல்லை பிரச்சினையிலும் விட்டுக் கொடுக்க முன்வருவாரா? என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குடிநீருக்கான திட்டங்கள் ஓகேனக்கலில் இருந்து நிறைவேற்றப்படுவது தமிழக எல்லைக்குள்ளானது. இதில் உரிமை கொண்டாட முயல்வதில் எள்ளளவும் நியாயமில்லை. இனியும் இதுமாதிரி பிரச்சினையில் ஈடுபட்டு நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க நினைக்காமல் ஆக்கப்பூர்வ வழியில் செயல்பட வேண்டும் என்று ஜி.கே.மணி கூறியுள்ளார்.